கிறிஸ்துமஸ் பண்டிகை: வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்போம்! -என்றி லாய்

கிறிஸ்துமஸ் பண்டிகை: வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்போம்! -என்றி லாய்

கோலாலம்பூர், டிச.24 – இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிமுகப்படுத்திய மலேசிய மடானி கருப்பொருளை வாழ்வில் கடைபிடிப்போம் என்று கெஅடிலான் வங்சா மாஜூ தொகுதி தலைவர் என்றி லாய் தெரிவித்தார்.

“இனம், சமயம் மற்றும் கலாச்சார பேதமின்றி நாம் அனைவரும் இந்த தூரநோக்கு சிந்தனையைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாட்டில் வசிப்பதற்காக நாம் அனைவரும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மற்றவர்களின் வேறுபாட்டை நாம் போற்றி மதிக்கிறோம். ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்து பாடுபடுகிறோம் ” என்றார் அவர்.

சந்தோஷம் மற்றும் சுபிட்சத்தை நினைவுபடுத்தும் ஒரு பண்டிகை கிறிஸ்துமஸ். ஒவ்வொரு கிறிஸ்துமஸ் மரத்திலும் காணப்படும் பெத்தலஹெம் நட்சத்திரமும் மனிதாபிமான அடையாளத்தைக் காட்டுகிறது. பேறு குறைந்தவர்கள் மீது பணிவு, கருணை மற்றும் இரக்கம் போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் தருணம் இது என்றார் கெஅடிலான் கூட்டரசு பிரதேச உதவி தலைவருமான என்றி லாய்.

“கடந்த ஓராண்டில் நிச்சயமற்ற பல சூழல்களை நாம் கடந்து வந்துள்ளோம். ஆனால், நமது மடானி அரசாங்கத்தின் விவேகம் மற்றும் இறைவனின் அருள் வழி இந்த இக்கட்டான நிலையை நாம் வெற்றிகரமாகக் கடந்துள்ளோம்” என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.அனைவருக்கும் இறைவன் ஆரோக்கியம், சந்தோஷம் மற்றும் வளத்தைத் தர வேண்டும் என்றார் கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரிய உறுப்பினருமான இவர்.